எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Thursday, February 25, 2010

என் பாகைமானி............


இயற்பியல் ஆய்வுகூடம் செல்ல
மணியடித்த பின்னர்
மாணவர்களோடு சென்றநான் பாகைமானியை
மறந்தது நினைவுக்குவர
எடுத்துவர திரும்பிசென்று தனிஒருவனாய்
ஆய்வுக் கூட மாடியில்
காலடிவைத்து நிமிர்ந்த போது
உன் தோழி துணையோடு நீ
வருவதைப் பார்த்து அதிர்ந்தது-என்
இதயம்!

எனை நீ பார்த்ததின்
எதிரொலியோ தெரியவில்லை அதுவரை
நீ சிரித்த சிரிப்பொலிகள்
மணலில் விழுந்த சில்லரைகளாய்
சலனமற்றே சரிந்தது!

நூல் அவிழும் ஓசைகூட
நூறு மைல்களுக்கு கேட்கும்
அந்த நிசப்தத்தில் கேலி
சிரிப்பை அடக்க முயற்சிக்கும் உன்
தோழியின் கைகளை கிள்ளத்
தவறவில்லை நீ.

இதுவே தொடரவேண்டுமென்று
காலத்தின் கடிகார முட்களை
நிறுத்த முயற்சித்து என்
இதயம் தோற்றுப்போனது என்னவோ
உண்மைதான்!

இருவருமே முகம் பார்க்க முடியாமல்
நான் உன் கொலுசின் வெள்ளி
முத்துக்களை எண்ணியதும்!
நீ என் கடிகார நொடிமுட்களையே
பார்த்ததையும் கவனிக்கத்
தவறிவிட்டேன்!

படிகள் குறையக் குறைய-குருதி
அழுத்தம் ஏறிக்கொண்டிருந்தது என்
இதயத்தினுள்.

நீ கடந்து சென்ற ஒரு நொடியில்
உன் ஸ்பரிச நாற்றம் முகர்ந்ததோடு
உன் முகம் பார்க்க முடியாமல் உன்
ஒற்றை சடையின் ஊதா ரிப்பன் மட்டுமே
கண்ணில் பட்டது.

மேலேறித் திரும்பிப் பார்த்தபோது
கைவிரல் பட்ட தொட்டால்சினுங்கியைப் போல்
மறுகணம் உன் முகம்
மருவி சுவர் நோக்கியதை ஏனோ
என் மணம் ஏற்கமறுத்தது.

நீ என்னைக்
கடந்து சென்ற ஓர்
நொடிக்காக முத்தம்
தருகிறேன்-என்
பாகைமானிக்கு!

அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment