எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Saturday, August 4, 2018

நட்பு

கரையாத
கரை!
களைக்காத
அலை!
தோழமையோடு
துவட்டிவிடும்
நுரை!
காதலிக்கசொல்லி
காதலிக்கசொல்லி
அழைப்பு விட்டு
அழைப்பு விட்டு
அலையனுப்பும்
ஆழி!
தோழமையோடு
மறுத்து-நுரை பதுக்கி
திருப்பிவிடும் கரை!
கரையாத
கரை
களைக்காத
அலை
தோழமைக்கும்
காதலுக்கும்
நுரையடங்கும் காலம்தான்
வரையறை!
வரையறுக்க
முடியா
காதலுக்குள்
தோழமையும்
வரையறுக்க
இயலா
தோழமையில்
காதலும்
மணலுக்குள்
மழுகிய நுணல்!
மங்காத
சுடர்
நட்பு.

Saturday, March 10, 2012

அன்புள்ள காதலுக்கு,

அன்புள்ள காதலுக்கு,
நான் எத்தனை
முறை எழுதினாலும் - நீ
பதில் அனுப்பப் போவதுமில்லை,
நீ
பதில் தராமல்
போனாலும் நான்
எழுதுவதை நிறுத்தப்போவதுமில்லை.

இறந்துபோன - தன்
மனைவிக்கு எழுப்பிய
தாஜ்மஹாலை விட - எனை
மறக்க முயற்சிக்கும் - என்னவளுக்கு
எழுதும் இக் கடிதம் மகத்தானது.

இயேசு முன்று நாட்களுக்கு
பிறகு உயர்த்தேழுந்தார்
என்பது வரலாறு.
நான் உன்னோடு
பேசிய ஒரு வாரகாலத்தில் - நான்
ஓராயிரம் முறை
உயிர்த்தேழுந்திருக்கிறேன்!!!

எனை மனித நிலையிலிருந்து
யோக நிலைக்கு
மாற்றியவள் நீ!

நீ பேசிய
ஒவ்வோர் வார்த்தைகளும்
என் இதயச் சுவரில்
ஈரம் மாறாமல்
பிசுபிசுத்துக்கொண்டிருக்கிறது.

நீ
ஏற்படுத்திய காதல்
வேள்வியில் - நான்
மெழுகுப் பந்தமாய்
உருகிக்கொண்டிருக்கிறேன்.
உணர்வற்று ஓர்
ஓரமாய் இருந்து - நீ
வேடிக்கை பார்க்கிறாய்.

இப்பொழுது கூட
நீ மறுக்க
வாய்ப்பிருக்கிறது .
மறுக்கப்பட்ட
காதலும்.
மறைக்கப்பட்ட
காதலும்
மறித்த காதலாகாது.

காலம் தாழ்த்தி
எடுக்கப்படும் முடிவுகள்
தற்கொலைக்கு சமம்.
இது ரஷ்யப் பழமொழி.

உனக்காக நான்
சூழ்நிலைகளை தள்ளிப்போட
முடியுமே தவிர
தட்டிக்கழிக்க முடியாது.

காத்திருக்கிறேன்
காதலே.
காலம் தாழ்த்தாதே.

கடிகார முட்கள்
வாழ்கையை புரட்டிப்போடும்
வல்லமயுடையது.

கரம் கொடு
கைப்பற்றி அழைத்துப்போக
நான் தயார்.

நமக்கான
பூங்காவனம்
இன்னமும் பசுமை மாறாமல்
காத்திருக்கிறது.

நுரையீரல் சுவாசம்

என்
வாசல்வரை
வந்து போன
வசந்தம்
நீ!

என்
நுரையீரல்
தொலைத்துத் தேடும்
உயிர் சுவாசம்
நீ!

நான்
வார்த்தைகளால்
சொல்ல இயலா
வலி தந்தவள்
நீ!

எனை
கனவு தேசம்
கூட்டி வந்து என்
கண் பறித்தவள்
நீ!

மீண்டும்
மீண்டும் - கரை தழுவும்
அலையாய்
காதல் வேண்டி
காதல் வேண்டி - உனை
யாசிக்கிறேன்.

கரையாத
கரையாய் - நீனும்
யோசிக்கிறாய்.

இதுவரையில் யாரிடமும்
நான் கெஞ்சியதில்லை - ஏதேனும்
பொருள் கேட்டு
மன்றாடியதில்லை,
உன்னிடத்தில்
மட்டும் ஏனோ
வேறுபடுகிறேன்.

என்
உள்ளத்து அன்பு ஏனோ
உனக்குப் புரிவதுமில்லை!

Saturday, March 3, 2012

முப்பொழுதும் உன் நினைவுகள்

இபோழுதெல்லாம்
எப்பொழுதும் நினைப்பதில்லை
உன்னை.
உனை
எப்பொழுதும் நினைத்த
பொழுதும்.
எப்பொழுதாவது நினைக்கும்
பொழுதும் எற்படும்
உயிர்வலியை சொல்ல
இப்பொழுதும் வார்த்தைகளில்லை
என் மொழியில்.

உனக்கான கனவுகள்
சுமந்த என் கண்கள் இப்பொழுது
கானல் நீர்ப்பிரதேசமாய்
மாறிவிட்டது .

உனக்காக
நான் உண்டாக்கிய
காதல் தேசத்தை
கல்லறைகளால் நிரப்பிவிட்டு
கண்ணுக்கெட்டாத தூரத்தில்
நீ இருக்கிறாய்.

என் ராஜவீதியின்
வைரகீரிடம் உன்
முடிசுட்டலுக்காக
காத்திருக்கிறது!!

எனக்குத் தெரியும்
இப்பொழுதுகூட இந்த
மின்அஞ்சலுக்கு
பதிலனுப்பப்போவதில்லை என்பது
எனக்குத் தெரியும்- இருந்தாலென்ன
என் காதல்
பதில் எதிர்பாராதது...............

Tuesday, June 29, 2010

என் புறநானுற்றுத் தாய் மீண்டும் பிறப்பெடுக்கிறாள்



பச்சைக்கறி தின்ற
எச்சில் கை காயாமல்
வரம் தந்த
அரசனுக்கு கைகுலுக்க
எங்கள் கரை வந்த
காட்டேறி.

முதலை குழுமத்தின்
முதன்மை உறுப்பினர்
கண்ணீரோடு கரையேறி
அசுரமடியில் அமர்ந்திருந்த
காட்டேறியின் காலிடுக்கில் நின்று
நரமாமிசம் தின்பதை
நிறுத்திவிடன்றேது.

காட்டேறியின்
"இனி நான் பல்குத்தப் போவதில்லை"
என்ற உறுதிமொழியை-தன்
வெற்றிச் சிகரமாக்கி-பிரிதொருநாளில்
கிழ முதலைக்கு கிரிடம்
சூட்டப்பட்டது.

அதோ என்
முலையறுந்த தங்கையொருத்தி
கந்தகம் நிரப்பப்பட்ட
யோனிக் குழிகளுடன்
வருகிறாள்.

முதலைக் கூடாரமாகட்டும்
அசுரர்களாகட்டும்,காட்டேரிகளாகட்டும்
இனி யம்மை யார்
புணர்ந்தாலும் சிதறடிப்போம்
மறுபுணர்தல் இன்றியேன்று.

என் புறநானுற்றுத் தாய்
மீண்டும் பிறப்பெடுக்கிறாள்
கோடானகோடியாய்.

Thursday, June 24, 2010

தீயா


என் விழிப்
பாவைக்குள்
நிறைந்த
பாவையவள்-நட்புக்
"கோ" வையவள்.

புரிதல் இல்லாப்
பேதையவள்.

பிறழ் மனம்கொண்ட
பெதும்பையவள்.

அன்பிலாய்
கோபத்தில் ஆந்தையாய்
எரிக்கும் அக்னியாய்.

அன்னையாய்
அனைத்தவள்.
அணையாய்
தடுத்தவள்.

மைகாய்ந்த
என் எழுதுகோலில்
அன்பு நிரப்பி எனக்கு
எழுதக் கொடுத்தவள்-என்
கை பிடித்து மீட்டு
கவிதை தேசத்திற்கு
மிண்டும்
அழைத்துவந்தவள்.

மெய்யானவள்
என்னில்
மெய் ஆனவள்.

வீதிகள்
புதைந்தஎன்
தேசத்தின் விடியலுக்காய்
விளக்கு கொடுத்தவள்.

செய்யாத
தவறுக்காய்எனக்கு
விலக்கு கொடுத்தவள்.

என்னிடத்தில்
உள்ள உனக்கான
பாத்திரமும்.

நமக்குள்
நீ ஏற்படுத்திய
இட்டுநிரப்பமுடியாத
இடைவெளியும்
வெற்றிடமாகவே
காத்திருக்கும்.

கழிவறைத் தாய்கள்


துளைமாற்றி
பிதுக்கி எறியப்படும்
மலமாய் சிசு.

உபயோகம்
முடிந்து உருவிஎறியப்படும்
ஆணுறையாய் தாய்மை.

கழிவறைகளில்
வழித்தேறியப்படும்
மாதவிடாய் கழிவுகளாய்
மனிதநேய மாண்புகள்.

புதுமை
புரட்சி
பெண்ணியம்
தேசியம்
புண்ணாக்கு.

பாரதி
மீண்டெழுந்து வந்து
இப் புண் ஆற்று.