எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Wednesday, February 24, 2010

கம்யுனிசம்(கதை)


மே தினக் கொண்டாட்டத்திற்கு எங்கள் ஊர் தயாராகிக் கொண்டிருந்தது,தெருவெங்கும் சிவப்பு கொடிகளும் பொதுவுடைமை கருத்துக்கள் நிறைந்த பதாகைகளும் நிறைந்திருந்தன.பகல் முழுதும் விளையாட்டுப்போட்டிகளும் மாலை 6 மணியளவில் சிறிய தெருமுனை கூட்டமும் நடப்பதாக ஏற்பாடாகி இருந்தது.

ராஜ்குமார் சித்தப்பாதான் ஏற்பாட்டாளர்,மிகப் பெரிய கம்யுனிச வாதி என்று எங்கள் ஊரில் அறியப்பட்டவர்.அவர் தலைமுறையில் ஓரளவு படித்தவர்,உள்ளூர் விவசாய அணியின் தலைவர்,ஓரளவு வசதியானவர்,இருந்தாலும் எந்த தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் கட்சிக்காக உண்டியல் ஏந்துவார்.நிறையப் புத்தகங்கள் சேமித்து வைத்திருப்பதால் என் விடுமுறை காலங்களின் பெரும்பகுதியை அவரது வீட்டேலேயே கழிப்பேன்,கார்ல் மார்க்ஸ்,சேகுவேரா, மரக்ஸ்சிம் பற்றி அதிகம் கூறுவார்.கார்த்திகை மாதம் தவறாமல் மாலை போடுவார்,கேட்டால் தோழர் ஜீவா முருக பக்தர் என சமன் செய்துவிடுவார்.

அன்று இரவு நடந்த கூட்டத்தின் வரவேற்புரையை வழங்க எனக்கு வாய்ப்பளித்தார், சேகுவேராவைப் போல கர்ஜிப்பதாக நினைத்துக்கொண்டு கத்தியதாக பிறிதொருமுறை எனது நண்பன் கூறினான்,மேடையின் கிழ் அப்பா என்னை முறைத்தபடி நின்று கொண்டிருந்தார் "வீட்டுக்கு வா வச்சிக்கிறேன்" என்பது போல் இருந்தது அவர் பார்வை இருந்தது.மேடையில் பேசும் போது கிழ் இருப்பவர்களை முட்டாள் எனக் கருது என யாரோ சொல்லியதாக சித்தப்பா சொல்லியிருக்கிறார்.

எனக்குப் பிறகு எல்லோரும் பேச பின் எழுந்த சித்தப்பா உள்ளூர் அரசியல்,உலக அரசியல்,ரஷ்யப் புரட்சி,ஆண்டான் அடிமை என ஒன்று விடாமல் பேசி முடித்தபோது மேடைக்கு கீழே 20 பேர் மட்டுமே எஞ்சி இருந்தனர் அதில் 10 பேர் கட்சி தோழர்கள்.

கூட்டம் முடிய சரியாக 11 மணிக்குமேல் ஆகிவிட எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டு வர சரியாக 12 மணி,அதுவரை சித்தப்பா வீட்டு வாசலில் சிங்கு காத்துக்கொண்டிருந்தான்,சிங்கு சித்தப்பாவின் வயல்களுக்கு காரியம்பார்ப்பவன்,"நேரமயிருச்சாப்பா"
சித்தப்பா வினவிய போது "இல்லைங்க நானும் இப்பதான் வந்தேன்" என்று கூறிய படியே எழுந்து
நின்றான் சிங்கு,"இன்னிக்கு நடவுக்கு எத்தனை ஆளப்பா?" "20 பேருங்க நாடார் கடைக்கு மட்டும் 70
ரூவா கொடுக்கனுங்க" என்று பதிலளித்தபோது திண்ணைத் திண்டில் தோள் துண்டை உதறியபடி
சாய்ந்து கொண்டார் சித்தப்பா,திண்ணையின் சாளரத்தில் வரிசையாக தலைவர்கள் படம் மாட்டப்பட்டிருக்கும்,அதில் கார்ல் மார்க்ஸ் எப்போதும் முறைத்துக் கொண்டிருப்பதைப் போல தோன்றும் எனக்கு.
"பாக்கியம் அவனுக்கு சோறு போட்டியா?" என்று கேட்டபடி கணக்கு நோட்டை
கையில் எடுத்து புரட்டினார் சித்தப்பா.தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து வந்து
"இலை கொண்டு வந்தியா சிங்கு" எனக் கேட்க பின்பு தேக்க இலைகளை ஒன்றாக இணைத்து
கூம்பாக செய்து கொண்டு வந்தான் சிங்கு.
"ஏப்பு போண்டா என்ன புதுசா இருக்கு கணக்குல?" என சித்தப்பா கேட்க "இன்னைக்கு மே 1 இல்லைங்களா" எனக் கூறியபடி தலையை கவிழ்த்தான் சிங்கு.
"மே 1 ன்னுன்னா சம்பளம் தரோமா இல்லையா? இந்தப் பழக்கம் அவதுங்கறேன்"
"இல்லைங்க ..........."
சிங்கு ஆரம்பிக்கும் முன்பே "யாருகிட்ட கேட்ட?" என சிடுத்தார் சித்தப்பா
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது சற்று முன்னர் ரஷ்யப் புரட்சியில் புர்ஷ்வாக்களை எதிர்த்து தொழிலாளர்கள் போராடியதை சித்தப்பா பேசியது எனக்கு நினைவில் வந்து போனது,அதற்குள் சாப்பாடு வாங்கி மடித்து கொண்டு கிளம்பத் தயாராகி விட்டான் சிங்கு.
"சத்தி நீ சாப்டுப்பா" என்று கூறிய போது "இல்லப்பா நான் விட்ல சாப்டுக்கிறேன் "
என்று கூறியபடி கிளம்பியபோது "ஏலே இரு இந்தா தாய் காவியம் புத்தகம் கேட்டியல்ல நேத்து" என்றார்.
"இல்லப்பா நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன்" என்று வேகமாக வெளியேறியபோது புகைப்படத்தில் இருந்து கார்ல் மார்க்ஸ் எனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment